Wednesday, July 25, 2012

அழுதிடும் கடைசி மடல் ..



நாட்குறிப்பு இதழ்களில் - மண
நாட்குறித்து பாராது - நம் 
காதலுக்கு மரண நாள்குறித்து 
காதலை காலாவதியாக்கிவிட்டாள்  !
காதலி தீர்ப்பெழுதிய வழக்கில் - என் 
காதலே தூக்கிலிடப்பட்டது .. 

இறுதியாய் ஓர் மடல் என்று 
இருபெத்துமூன்று பக்க ஒப்பாரி..  

தீர்பெழுதப்பட்ட ராகுகாலம் 
விக்ருதி வருடம் வைகாசி மாதம் 
இருபதுக்கப்புறம் இரண்டாம் நாள் 
நள்ளிரவுக்கு நாலுநிமிடம் முன்..

ஆங்கிலத்தில் தயவுகூர்ந்து ஆரம்பித்து 
ஆத்திரம் குறையென வேண்டிநிற்க
வேண்டிநின்ற வசனங்கள் 
வீரியமாய் தொடர
முப்பது வரிகளில்
முதற்பக்கம் காலி..

ஆங்கிலம் என்றாலே ஒவ்வாமை எனக்கு 
"நான் உனை இழக்க " எனும் வாசகம் 
ஆங்கிலத்தில் அதற்கு 

நினைவு குறித்து எழுதிய 
நாட்குறிப்பெல்லாம் 
என்னிடம் கொடுத்தது தவறென்றாய் 
எண்ணம் குறித்துவைத்த நாளெல்லாம் 
என்னிடம் உள்ளதை என்ன சொல்வாய் 

என்னை வசை கூறி வரைந்த பக்கங்கள்
என்னை வந்து சேர்ந்தது துகள்களாக 
ஒட்டினாலும் படிக்க முடியா - நம் 
ஒட்டுடைந்த உறவுக்கு அடையாளமாய் 

"நம் காதலை எரித்தவுடனே - என்  
நாட்குறிப்பையும் எரித்திருப்பேன் - உன் 
கையெழுத்து இல்லை என்றால் " என்றாய் 

மரண தண்டனை தீர்ப்பெழுதும் பேனாவும் 
மரண தண்டனையும் அனுபவிப்பதுபோல் - என்
காதலுக்கு மரணதண்டனை விதித்து - நீ 
கால ஏடு பதிவதற்கும் மரண தண்டனை கொடுத்துவிட்டாய்..

உண்ணவும் மறப்பேன் 
உறங்கவும் மறப்பேன் 
உயிரே உன்னை 
எங்கனம் மறப்பேன் ?

இத்தனையும் தெரிந்தும் 
எத்தனை முறை கேட்டாய்
என்னிடம் மறக்க 
உந்தன் நினைவுகளை 

நீ
எந்த மொழியில் மன்னிப்பு கேட்டாலும் 
எத்தனை முறை மன்னிப்புக்கேட்டலும் 
உன்னை மறப்பதற்கு ஒரு வழி சொன்னால் 
உன்னை மன்னிப்பது பெரிதன்றெனக்கு..

உற்றார்  கேட்டதற்கும், உறவினர் கேட்டதற்கும்
எனக்கு தொழில் இல்லை என்பதினால்  
உனக்கு பதிலில்லை என்றாயே 
ஊர் ஊராய் உன்னோடு நான் வந்த போதெல்லாம் 
உற்றாரும், உறவினரும் உனையேதும் கேட்கல்லையா?

சுயமரணம் சாத்தியம் என்றால் 
சுகமென்றாய் எனை மறப்பதிலும்.

பல்லாயிரம் கண்நீர்த்துளியும் 
பல்லாயிரம் மன்னிப்பும் 
பல்லாயிரம் விவரங்களும் கொண்ட 
காதல் விவாகரத்து பத்திரம்.. 
எனை வந்தடைந்த - உன்
கண்ணீர் நிறைந்த 
அழுதிடும் கடைசி மடலாய். 

No comments:

Post a Comment